Monday, May 16, 2011

தி மு க வே இம்முறை வென்றது..

மசாலா திரைப்படத்தின் அம்சங்களுடன், எதிர்பாராத க்ளைமாக்ஸ்சுடன் இனிதே முடிவடைந்துவிட்டது தமிழக தேர்தல் திரைப்படம்.. ஜனநாயகத்தின் எஜமானர்கள் இந்த முறை பணநாயகத்துக்கு முன்னுரிமை தராமல் வாக்களித்து இருப்பது மிகப்பெரிய ஆறுதல்.

ஒரு மாத காலம் ரகசியத்தை அடைகாத்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க வாக்குபெட்டிகள் திறக்கப்பட்டபோது அனைவரையும் வாய் பிளக்க செய்தது. அனைத்துவிதமான கணிப்புகளையும் பொய்யாக்கி புரட்டிபோட்டுள்ளது மக்கள் தீர்ப்பு.

வெற்றி பெற்ற அம்மா மிகுந்த சந்தோஷதுடம் பதவி ஏற்றுவிட்டார்
,தோல்வி அடைந்த கலைஞர் "மக்கள் அளித்த ஓய்வு" என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். பொது ஜனம் வாக்களித்துவிட்டோம், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அவர்களின் வயிற்று பிழைப்பை பார்க்க போய்
விட்டார்கள்.. அரசியல் ஆர்வலர்களும் , பதிவர்களும் மட்டுமே எப்படி நடந்தது இது என்று தலையை பிய்த்துக்கொண்டு அவரவர் ஒரு கருத்தை பதிவு செய்கிறார்கள். அந்த வகையில் என் பதிவு..

இதுவரையில் இப்படி ஒரு அமைதி புரட்சியை என் அனுபவத்தில் பார்த்ததில்லை. 1996 தேர்தலில் அம்மா துடைத்து எறியப்படுவார் என்பது கன்னியாகுமரி முதல் சென்னை வரை பளிச் என்று தெரிந்தது. அந்த தேர்தலில் திமுகவின் வெற்றி எத்துனை வாக்குகள் வித்தியாசத்தில் என்பது மட்டுமே வாக்கு எண்ணிக்கை நாளன்று பார்க்கப்பட்டது .. அதே போல 2001 , 2006 தேர்தல்களிலும் முடிவுகள் பெரும்பான்மையானோர் யுகித்தபடி இருந்தது.. 2011 என்பது தான் உண்மையிலேயே மௌன புரட்சி என்று சொல்லவேண்டும், அந்த வகையில் தமிழக வாக்காளர்கள் விவரமானவர்கள் , சில சமயம் அதிகார, பண நாயகத்துக்கு சறுக்கினாலும் மீண்டும் சுதாரித்து எழுந்து விட்டார்கள்.

என்னை பொறுத்தவரையில் இது திமுகவின் வெற்றி என்றே சொல்லுவேன். ஏன் என்று கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன் கலைஞரிடம் சில விஷயங்கள்

கலைஞரே , எங்கே சறுக்க ஆரம்பித்தீர்?? மொத்தமாக எங்கே சறுக்கி அதளபாதாளத்தில் விழுந்தீர் என்று உங்களுக்கே நன்றாக தெரியும்.. அரசியலில் பழுத்த பழம், அரசியல் நெளிவு சுளிவு அத்துப்படியான உங்களுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஆனாலும் சூழ்நிலை கைதியான நீங்கள் வேறு வழி இன்றி அனைத்துக்கும் சப்பைக்கட்டு கட்டிகொண்டே வந்ததன் விளைவு இந்த "ஓய்வு" .

பத்து , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதிக்கு அழகிரி என்றொரு மகன், கனிமொழி என்று மகள், ராஜாத்தி என்ற துணைவியார் இருக்கின்றார் என்பதெல்லாம் செவி வழி செய்தியாக மட்டுமே இருந்தது. மீடியாக்களின் ஆதிக்கம் அதிகமில்லாத அந்த காலத்தில் பெரும்பாலனவர்கள் உங்களின் வாரிசுகளை பற்றி பெரிதும் அறிந்திருக்கவில்லை.

எதிர்கட்சிகள் கூட ஸ்டாலின் என்ற ஒற்றை மனிதரை முன்னிறுத்தியே "வாரிசு அரசியல்" என்ற அம்பை உங்கள் மீது எய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வாரிசு அரசியல் என்பது மக்களால் புறம் தள்ளப்பட்டதுக்கான சாட்சி தான் ஸ்டாலின் பெற்ற வெற்றிகள். கட்சியினரும் ஸ்டாலினை முழுமனதாக ஏற்றுக்கொண்டதும் அவர் தி மு க தலைவரின் மகன் என்ற காரணத்தை காட்டிலும் தி மு க விற்காக இளம் வயதில் இருந்து உழைத்தவர் என்பதே.

ஆனால் , இந்த பத்தாண்டுகளில் தான் வாரிசு அரசியல் தன் அடுத்த பரிமாணத்துக்கு சென்றது , ஆம் குடும்ப அரசியலாக தன்னை நிலைநாட்டியது.. முரசொலி மாறனின் மறைவிற்கு பிறகு தயாநிதி உள்ளே நுழைந்தார் , கனிமொழி , அழகிரி என்று அடுத்தடுத்து வாரிசுகள் உள்ளே நுழைந்த போது தான், திமுகவின் தலைமை மட்டுமே அதிகார மையம் என்றிருந்தது மாறி, தென் மண்டலம் , வட மண்டலம் என்று பிளவுபட்டு நின்றது. தலைவரின் வழி நின்று அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தங்களின் பிள்ளைகளையும் அரசியலில் இழுத்துவிட, வட , தென் என்பதையும் தாண்டி குறுநில மன்னர்கள் போல் ஆங்காங்கே அதிகார மையங்கள் தோன்றியது.. இது ஆபத்தில் முடியும் என்று உங்களுக்கு தெரிந்த போதிலும் கேட்க முடியாத சூழ்நிலையில் கைகட்டி மௌனியாகவே வேடிக்கை பார்த்தீர்.

ஸ்டாலின் வருகையை ஆரவாரத்துடன் வரவேற்ற அதே தொண்டன் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு கண்டு உள்ளேயே புழுங்கினான், தொண்டன் அல்லாத தி மு க அபிமானிகள் முகம் சுளிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பின் வாசல் வழியாக கனிமொழிக்கு பதவி வந்த போது உதட்டளவில் சிரித்து , மனதளவில் குமுறிய தொண்டனும், விட்டுக்கொடுக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அடுத்தவரிடம் ஏதோ சால்ஜாப்பு சொன்ன தி மு க அபிமானிகளும் ஏராளம் ஏராளம். கட்சி சார்ந்த , பொது மற்றும் சில அரசு சார்ந்த விழாக்களின் போஸ்டர்கள், மேடைகளில் ராசத்தியம்மாவும் , தயாளுஅம்மாவும் இடம் பெற்றதுதான் உச்சக்கட்டம். அமைச்சர்கள் பலரும் உங்களை விடவும் உங்களின் மனைவி துனைவிகளிடம் அரசியல்,ஆட்சி, அதிகாரம் பற்றி பேசி காரியம் சாத்திக்க முடியும் என்ற நிலை வந்தபோதாவது நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும்.

ஸ்டாலின் வருகையை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கூட அடுத்தடுத்து வந்த அதிகார மையங்களை ரசிக்கவில்லை என்பதும் , அதை பற்றி உங்களுடன் என்ன விதமான கருத்துக்களை சொல்லி இருப்பார்கள் என்பதும் உங்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்.

ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் எடுபடவில்லை என்று எதிர்கட்சிகள் அங்கலாய்த்த நேரத்தில் வராது வந்த மாமனிகளாக வந்தவர்கள் தான் தயாநிதி, அழகிரி, கனிமொழி, மனைவி , துணைவி.. கயல்விழி. உங்கள் மீது எறிய எதிர்கட்சிகளின் கைகளில் நெல்லிக்கனி அளவில் இருந்த வாரிசு அரசியல் என்ற கூழங்கல்லை மக்கள், கட்சியினர் வலுக்கட்டாயமாக கிழே போட வைத்த வேளையில் இந்தா பிடி என்று நீங்களாகவே திணித்தது தான் குடும்ப அரசியல் என்ற பாறாங்கல். கூழங்கள் வைத்தே உங்களை பதம் பார்த்தவர்கள் , பாறாங்கல் கிடைத்தால் சும்மா விடுவார்களா??

மீடியாவின் ஆதிக்கம் இல்லாத போது அடங்கி இருந்தவர்கள், மீடியாக்கள் பெரு வளர்ச்சி பெற்ற கால கட்டத்தில் வெளிவந்து போட்ட ஆட்டத்தின் விளைவு தான் உங்கள் குடும்பம் அக்டோபஸ் உருவம் பெற்று வார இதழ் முதல் இணையம் வரை பரவி கிடக்கிறது.

தமிழகத்தை பொறுத்த வரை மீடியா வளர்ச்சிக்கு முக்கிய காரணி உங்கள் குடும்ப தொலைகாட்சி "சன் டிவி" என்றால் மிகையாகது.. அதே மீடியா உங்களின் குடும்ப அரசியலை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு கடைகோடி குக்கிராமத்துக்கும் எடுத்து சென்றது தான் கொடுமை.. அதுவும் நீங்கள் கொடுத்த இலவச தொலைக்காட்சியே அதை செவ்வனே செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை

அதிகார மையம் ஏற்பட்டுவிட்டது சரி.. ஆட்டம் போடாமல் இருந்திருக்கலாம் அல்லவா ??

ஒரு சர்வே மதுரையில் மூன்று உயிர்களை பலிவாங்கியதே. தினகரன் ஊழியர் என்பதால் அவர்கள் தி மு க அபிமானிகளாக இருக்க கூட வாய்ப்பு இருந்தது.. தருமபுரி பஸ் எரிப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன வேறுபாடு? அங்கே இறந்தது பெண்கள், இங்கே இறந்தது ஆண்கள் என்பது தவிர்த்து ?

இந்த துயர சம்பவத்தில் உங்களின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும்? "அதுக்குத்தான் அப்போவே சர்வே வேண்டாம் என்று சொன்னேன் , கேட்கவில்லை" என்ற ஒற்றை வரியில் முடிதுக்கொண்டிர்களே .. அதன் விளைவு தான் இன்று "எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் " என்று அதே ஒற்ற வரியில் சொல்ல வைத்திருக்கிறது..

உங்களுக்கு கண்கள் பனித்து நெஞ்சம் இனித்த போது உங்கள் தொண்டர்களுக்கும் , தி மு க அபிமானிகளுக்கும் கண்கள் எரிந்தது , இதயம் வெடித்தது என்ற உண்மையை இப்போதாவது உணருங்கள்.

ஒரே ஒரு டி குடித்துவிட்டு தலைவர்களின் ஆணையேற்று மாடாய் உழைத்தவன் திமுக தொண்டன் என்பது வரலாறு.. ஆனால் இன்று அப்படி அல்ல .. அவனும் சிந்திக்கிறான்.. குடும்ப ஆதிக்கம் என்று எதிர்கட்சிகளும், பொது ஜனமும் சொல்லிடும் போது அவனுக்கும் உண்மை தெரிகிறது.. நியாயமான அயர்ச்சி ஏற்படுகிறது.. விளைவு அவன் முழுமையாக தேர்தல் வேலைகள் செய்வதில்லை..

தேர்தல் முடிந்த பின்பு கூட ஒரு விழாவில் என் குடும்பத்தினர் திரைத்துறையில் வந்தால் மட்டும் சிலருக்கு கசக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளீர்கள். ஏ வி எம் குடும்பம் இல்லையா என்று கேள்வி வேறு.. கலைஞரே, காலம் காலமாக திரை படத்தயாரிப்பிலே ஊறி போன ஏவிம் , தேவர் பிலிம்ஸ் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் வருவதற்கும், 70 களில் திரைக்கதை வசனம் மட்டுமே எழுதி, சில படங்கள் தயாரித்து , வாங்கி, பின்னர் பொதுவாழ்விலேயே காலம் கழித்து வரும் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிவைத்தார்போல திரைப்படம் தயாரிக்கவும், விநியோம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது உங்கள் மனதுக்கு தெரியாத ஒன்றா என்ன? வந்துவிட்டார்கள் , அடக்கமுடியவில்லை.. அதனால் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று பேசிவிட்டீர்.. அப்படிதானே?

உங்கள் வாரிசுகளின் தயாரிப்பில் முன்னணி நடிகர்கள் நடித்தார்கள்.. ரஜினி கமல் முதல் சூர்யா கார்த்தி விஜய் அஜித் தனுஷ் வரை.. உண்மைதான்.. அது அவர்கள் தொழில், வரும்படி எங்கு வந்தாலும் நடிப்பார்கள்.. கையில் காசு பார்த்ததும் போய் கொண்டே இருப்பார்கள்.. அதுக்காக, ஒட்டுமொத்த திரைதுரையுமே உங்கள் பின்னாலே வந்துவிடும் என்று நீங்கள் நினைத்து விட்டதை தான் ஜீரணிக்க முடியவில்லை.

பாசதலைவனுக்கு பாராட்டு விழாவெல்லாம் அரிதாரம் போட்ட ஒப்பனை முகம் தான் , உள்ளே இருந்த காயங்கள் , தழும்புகள் உங்கள் கண்ணனுக்கு தெரியாமலே மணிகணக்கில் உட்கார்ந்து ரசித்து விட்டு வந்த உங்களை என்ன என்று சொல்வது..

அப்போது கூட புண்ணியவான் அஜித் உங்களுக்கு ஒரு அபாய சங்கை ஊதினார்.. பாசக்கார பயபுள்ளைகள் அடித்த ஜிங்குச்சா சத்தம் நிறைந்திருந்த உங்கள் செவியின் வழியில் அந்த அபாய சங்கு உங்க மூளையை எட்டமுடியாமல் முனங்களோடு திரும்பிவிட்டது.

குடும்ப ஆதிக்கம் பற்றியே பதிவு செய்ய நினைத்தேன், ஆனால் உங்கள் விழ்ச்சிக்கு குடும்ப ஆதிக்கத்துக்கு இணையாக வந்த மற்றொரு காரணம் மின்வெட்டு .. அதை பற்றி சில வரிகள்..

மின்பற்றக்குறை - அமைச்சர்களிலேயே அதிகமாக விமிர்சிக்கபட்டவரும் கேலி செய்யப்பட்டவரும் உங்களின் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான். இது ஏதோ இந்த ஆண்டில் மட்டுமல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தை முடக்கி போட்டது. "இருட்டுத்துறை" "மின்வெட்டு" அமைச்சர் என்று வீராசாமிக்கு பெயர் வாங்கி தந்த அளவுக்கு கை மீறி போனது.. நகரம் சம்மரில் அவதிப்பட்டது, கிராமங்கள் வருடத்தில் 10 மாதங்களும் மின்வெட்டில் அவதிப்பட்டது.. வெயில் காலங்களில் மக்கள் காற்று இல்லாமம் புழுங்கிய புழுக்கமும் , அவர்கள் அனுபவித்த அனலும் தான் இப்போது உங்கள் அரசை பொசுக்கிவிட்டது..

மின்வெட்டு விஷயத்தில் எப்போதும் முந்தைய அரசையே குறை சொன்ன நீங்கள் அதற்கு பதில், என்னென்ன செய்திருக்கலாம்? அரசு விழாக்களில் மின் உபயோகத்தை குறைத்திருக்கலாம், பாலங்களை திறக்கும் போது அவை பல நாட்கள் மின் வெள்ளத்தில் சொலிக்க விட்டதை தவிர்த்திருக்கலாம்.. பகல் முழுது தேவையின்றி சாலைகளில் எறிந்த சோடியம் விளக்குகளை நிறுத்த செய்திருக்கலாம். மத்திய தொகுப்பில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கி இருக்கலாம்.. குறைந்த பட்சம்.. விழாக்களில் / திருமணங்களில் மின் உபயோகத்தை கட்டுப்படுத்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கலாம் .. அதை எல்லாம் விடுத்து கடைசி வரையிலும் வெறுமனே அதிமுகவை குறை கூறிகொண்டே இருந்தால் போதும் என்று மெத்தனமாக இருந்துவிட்டீர்.. பிரசாரத்தின் போது மின்வெட்டால் பலருக்கு வாகனங்களில் கைக்கூப்பி வந்த தி மு க வேட்பாளர் முகம் கூட தெரியாமல் போனது தான் சாதனை..

சரி மக்களே பொறுமையாக படித்தமைக்கு நன்றி - இப்போ தலைப்பின்படி தி மு க வென்றது.. ஏன்? 2011 - இந்த முறை கலைஞர் வென்றிருந்தால் , அது தி மு க வின் உண்மையான வெற்றி கிடையாது.. அது கலைஞரின் குடும்பத்துக்கு , தி மு க அமைச்சர்களின் குடும்பங்களுக்கு, மாவட்ட செயலாளர் குடும்பங்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமே .. ஒரு பத்தாயிரம் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றி மட்டுமே.

இந்த தோல்வி நிச்சயம் கலைஞரை , தி மு க முன்னணி தலைவர்களை சிந்திக்க வைக்கும்.. தவறுகள் திருத்தப்பட ஒரு வாய்ப்பு.. தி மு க மீண்டும் எழுந்து வர வாய்ப்பாக அமையும்.. திமுக சுயபரிசோதனை செய்ய கிடைத்த பொன்னான காலம். மீண்டும் பழைய வேகத்தோடு எழும் சந்தர்ப்பம். கலைஞர் ஓரளவுக்கு (கூட்டணி ஆட்சி) வென்றிருந்தால் அவருக்கு இது பற்றி சிந்தித்து பார்க்க கூட நேரம் இருந்திருக்காது . கட்சியும் விரைவிலேயே கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இந்த தோல்வி "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற ஒரு கட்சிக்கு, அந்த கட்சியின் லட்ச கணக்கான தொண்டர்களுக்கும் , லட்சகணக்கான அபிமானிகளுக்கும் கிடைத்த வெற்றியே.

திமுகவிற்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல.. இதைவிட அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறது.. பதினான்கு வருடம் கட்சி தோல்வியை மட்டுமே ருசித்த போதும் கட்சியை சிதைந்து போகாது காத்த பெருமை கலைஞருக்கு உண்டு.. அந்த வகையில்,

குடும்ப அரசியல்,அதிகார மையத்தை உடைத்து எறிந்து மக்களாலும் , கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து , நீங்களும், பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்கள் பின்னல் இருந்து வழி நடத்தினால்.. 2016 அல்ல, 2014 உங்கள் வசமாகும் என்பதே அனைவரின் ஆசை. அதே நேரத்தில் செய்வீர்களா என்பதே ஓவ்வொரு தொண்டனின்,அபிமானியின் கேள்வியும்,


காலம் பதில் சொல்லட்டும்..




இது என்னளவிலான கருத்து , உங்கள் வாதத்தை கருத்து பெட்டியில் மறக்காமல் சொல்லவும்..
பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போடுங்கள்..




நன்றி
வேலவன்

18 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

உண்மையில் விருப்பு வெறுப்பின்றி அலசப்பட்ட ஒன்று....அருமை

Kathir, Thiruvannamalai said...

//ஜிங்குச்சா சத்தம் நிறைந்திருந்த உங்கள் செவியின் வழியில் அந்த அபாய சங்கு உங்க மூளையை எட்டமுடியாமல் முனங்களோடு திரும்பிவிட்டது//

VERY CORRECT Velavan

Anonymous said...

தெளிவு .. ஒவ்வொரு திமுகவினரும் இப்படித்தான் நினைத்திருப்பர்கள்..

வேலவன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரஹீம்,

வேலவன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர், அனானி ,

ராஜேஷ், திருச்சி said...

வேலவன் - என்னை போன்ற தீவிர திமுக அபிமானிகளின் எண்ணத்தை பிரதிபலித்ததாக்கு நன்றி

ழகரம் said...

மிக அருமையான கட்டுரை

bandhu said...

உண்மையிலேயே நன்றாக அலசி உள்ளீர்கள். (நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை ) கொஞ்சம் ஸ்பெக்ட்ரம் குறித்தும் எழுதியிருக்கலாம். என்னை பொறுத்தவரை கருணாநிதி செய்த தவறுகளில் பெரிய ஒன்று இந்த முறையே பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம். ஆட்சி இருக்கும்போது பொறுப்பு ஒப்படைத்து அனைவரும் ஏற்றுக்கொள்வது எளிது.

Harrispan said...

Eelam is not a issue at all for DMK cadres?Correct? 63 is not issue at all?

arasu said...

It is not a big issue to tackle the problem of powercut. Like in Bangalore, all waterheaters should only be connected to solar system, not to the power. And also instead of spending money to FREE TV, they could spend those money to solar panels to give power to all street lights in town &villages.And the Government could encourage individual homes to use solar power back-ups up to 1kv capacity which costs around 2lac rupees.For those amount can be given as loan or portion of amount to be subsidised. And more than that IN D.M.K rule, the windmill owners were not properly paid for the power supplied by them to DMK government. So that they reluctant to generate more power and hesitate to invest more in windmills.Nothing is impossible in India.But we should use our brain .

ராஜ நடராஜன் said...

//இதுவரையில் இப்படி ஒரு அமைதி புரட்சியை என் அனுபவத்தில் பார்த்ததில்லை//

எதிர்கட்சி தகுதி கூட இல்லாமல் தி.மு.க தோற்கும் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான்!

ராஜ நடராஜன் said...

சுனாமி வந்தபின் எச்சரிக்கை விட்டுள்ளீர்கள்.இதே கருத்தை வேறு பாணியில் அபாயம் என எச்சரிக்கை பலரும் முன்பே விட்டுள்ளார்கள்.ஆனால் அவை திமுக எதிர்ப்பு நிலையென்று சுனாமி திசை நோக்கியே திமுக பயணித்துள்ளது.

வேலவன் said...

வருகைக்கு நன்றி திருச்சி ராஜேஷ் .. பல பதிவுகளின் தங்களின் கருத்தை பார்த்ததில் நீங்கள் திமுகவின் தீவிர தொண்டர் / அபிமானி என்பது தெரிகிறது.. நீங்களும் இந்த கருத்தோடு ஒத்துபோனது மகிழ்ச்சி

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி ழகரம்

வேலவன் said...

நன்றி பந்து (bandhu ) - spectrum உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும் , என் மனதிற்கு பளிச் என்று பட்டது குடும்ப அரசியல் மற்றும் மின்வெட்டு என்பதனால் அது பற்றி மட்டும் பதிந்தேன்.. உண்மையை சொல்லபோனால் spectrum 50௦ - 80௦ தொகுதிகளில் தெரிந்திருக்கும் என்றால், குடும்ப தலையீடு 234 தொகுதிக்கும் தெரிந்திருக்கிறது.. நம் மக்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.. அடுத்த தேர்தலில் spectrum சுத்தமாய் மறந்து மறைந்து போகலாம். ஆனால் குடும்ப அரசியல் மாறாவிட்டால், அது வரவிருக்கும் அணைத்து தேர்தல்களிலும் அடிகொடுத்துக்கொண்டே இருக்கும்

வேலவன் said...

harrispan - certainly, eelam is also an issue but it takes the last row. hope u know the reason.. thanks for your comment

வேலவன் said...

நன்றிகள் ராஜ நடராஜன் - சரியாக சொன்னீர்.. வழக்கமா கண்கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் என்பது நம் அரசியல்வாதிகளின் நிலை..
அதான் என் பதிவுலும் சொன்னேன்.. ஊதிய அபாய சங்கு கூட முதல்வர் காதில் கேட்காத அளவுக்கு ஜால்ரா சத்தம் அவர் காதுகளை அடைத்து விட்டது

Prakash said...

Good one, 2G & Eelam might have very little immpact.

But power cut is the major one. Because power touches 100% of houses and industries & factories. People suffered not only at homes, also as revenue/wage loss in factories due to power cut.

Also as you said projected domination of family in media & Cinema.

hemamalini said...

தோல்விக்கு முக்கியமான காரணம் - ஓவர் குடும்ப தலையீடு.. நல்ல அலசல்

Post a Comment