Wednesday, June 8, 2011

அரசியல்வியாதி

ஆட்டோவில் இருந்து இறங்கி பங்களாவை நோக்கி நடந்தாள் கவிதா..

கவிதா 30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தாள், பார்பவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் வசீகர முகம் மற்றும் உடலமைப்பு...

ஏதோ ஒரு சோகம், அவள் முகத்தில் இழையோடியது

பங்களா வாசலில் வந்து, கறுப்பு கிரானைட்ல் தங்க நிற எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருந்த பெயர் பலகையை படித்தாள்.. "சாம்பவசிவம், மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர்"
படித்துக்கொண்டே உள்ளே நுழைய முற்பட்டவளை , செக்க்யூரிட்டி குரல் தடுத்தது..

யாரும்மா நீ.. என்ன வேணும்..

சார், என் பேரு கவிதா, விதவைகள் மறுவாழ்வு நிதி சம்பந்தமா மனு கொடுத்தேன், அமைச்சர் ஐயா வந்து பார்க்க சொன்னாங்க.. இதோ கடிதம் என்று காண்பித்தாள்..

வாங்கி சரி பார்த்த செக்யூரிட்டி, சரி போய் அந்த பெஞ்சில உட்காருமா.. கூப்பிடுவாங்க..

அவளின் உடலை மேலிருந்து கீழ் கண்களால் அளந்த செக்யூரிட்டி, அமைச்சர் ஐயா காட்டுல இன்னைக்கு மழை தான்.. மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

கரை வேட்டிகள் வருவதும், போவதுமாக இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே அமர்ந்து கொன்டிருந்த கவிதா, யாரும்மா கவிதா என்ற குரல் கேட்டு திரும்பினாள்..

வெள்ளை சட்டை பேண்ட் அனிந்த, படித்த தோற்றத்தில் இருந்த இளைஞன் தன்னை அமைச்சரின் உதவியாளர் ராஜன் என அறிமுகபடுத்திக்கொண்டான்..

உங்க கனவர் எப்போ இறந்தாரு?

6 மாசம் ஆகுதுங்க.. இன்னும் அரசு தர விதவைகள் உதவி பணம் வரலைங்க. அதான் ஐயாவ பார்த்து.. விசும்பினாள் கவிதா...

சரி சரி, அழாதே.. அதான் ஐயாவ பார்க்க வந்துட்டேல.. கிடைச்சுடும்,.. கவலை படாதே.. கொஞ்சம் ஐயாவ அனுசரிச்சு போனா.. எல்லாம் நல்லபடியா சீக்கிரம் நடக்கும்.. புரியுதா..சொல்லிக்கொண்டே நடந்தான் ராஜன்.. குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள் கவிதா..

அமைச்சரின் அறைக்குள் நுழைந்ததும் 'வணக்கம் ஐயா' என்றாள் பவ்யத்துடன்..

வணக்கம், உட்காரும்மா .. இருக்கையை காட்டினார் அமைச்சர்...அவளின் அங்கங்களை அனு அனுவாக ரசித்தன அவரின் கண்கள், கருப்பு கண்ணாடிக்கு பின்னாளிருந்து..

உன் மனுவை படிச்சேன்.. நிறைய சம்பிரதாயம் இருக்குமா .. அதெல்லாம் முடிச்சப்புறம் தான் உனக்கு பணம் வரும்.. நான் எல்லாம் பாத்துக்குறேன்.. மத்த விஷயங்களை என் பி. ஏ சொல்லுவார்.. கேட்டுக்கோமா.. சொல்லிவிட்டு.. ராஜனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தார்.. ராஜனும் கண்களால் அவருக்கு சைகை செய்தான்..

சரிங்கய்யா.. ரொம்ப நன்றிங்கய்யா.. சொல்லிவிட்டு வெளியே வந்தாள்..

பின்னாலேயே ராஜனும் வந்தார்...

என்னம்மா ஐயா சொன்னத கேட்டியா ??.. எல்லாம் உன் கையில தான் இருக்கு.. அடுத்த சனிக்கிழமை சாயந்திரம் 7.00 மனிக்கு மதுரவாயல்ல இருக்க ஐயாவோட பன்னை வீட்டிற்கு வந்துடு.. ஐயா அங்கே இருப்பார்... ஒரு ரெண்டு மனி நேரம்..

திங்கட்கிழமை உனக்கு அரசாங்கம் தரும் விதவைக்கான உதவி பணம் வீடு தேடி வரும்.. அவள் கையில் பன்னை வீட்டு விலாசத்தை தினித்து அனுப்பி வைத்தார்.யோசிச்சு பாரு.. காலைல எனக்கு போன் போட்டு நல்ல சேதியா சொல்லு..

இரண்டு நாட்கள் மிகப்பெரிய மனப்போராட்டத்துக்கு பிறகு.. போன் எடுத்து, ராஜனின் என்னை அழுத்தி, ஒரே வார்த்தையில், சரி என்று சொல்லி, கட் செய்தாள்..

சனிக்கிழமை மாலை 3 மனி, அமைச்சர் பரபரப்பாக இருந்தார்..அவர் துறையில் நடந்த ஒரு ஊழல் பற்றி அக்கு வேறு ஆனிவேறாக ஒரு புலனாய்வு இதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.. அதன் அடிப்படையில், முதல்வர், அமைச்சரை வந்து பார்க்கும்படி கட்டளையிட்டிருந்தார்.. படபடப்புக்கு அதுவே காரனம்..

சந்தர்ப்பம் சரியில்லாததால், தயங்கி தயங்கி அவர் அருகில் வந்த ராஜன் , ஐயா, இன்னைக்கு 7 மனிக்கு பன்னை வீட்டுல கவிதா..... இழுத்தான்..

வேண்டாம் ராஜன், அதை கேன்சல் பன்னிடு, அந்த பொண்ணை நாளைக்கு வரச்சொல்லு.. சொல்லிவிட்டு படபடப்புடன் அவர் அறைக்கு சென்றுவிட்டார்..

இரவு 7 மனி, மதுரவாயல் பன்னை வீடு..

இதோ பாரு கவிதா.. அமைச்சர் ஐயா வர முடியாத சூழ்நிலை, நாளைக்கு வெச்சுக்கலாம், ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. எதுவா இருந்தாலும், ஐயாகிட்ட நான் சொன்னா தான் எடுபடும். புரிஞ்சுக்கோ... வந்ததே வந்துட்டே.. எவ்வளவோ பேர தொட்டிருக்கேன்... ஆனா உன்னை மாதிரி... அம்சமான தேக்கு உடம்பு... எனக்கும் அடுத்த வாரம் கல்யாணம்.. கல்யாண நெருக்கத்துல ஒரு ட்ரியல் பார்த்த மாதிரியும் இருக்கும்.. என்ன சொல்றே ... கேட்டுக்கொண்டே அவள் தோள் மீது கைப்போட்டான்... சிறிது தயக்கத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் அவனுடன் அறைக்குள் சென்றாள் கவிதா...

சுமார் 2 மணி நேரம் கழித்து அவள் வெளியே தெருவில் நடந்தாள்...

தன் கைப்பையில் சினுங்கிய கைப்பேசிய எடுத்தாள்.. மறுமுனையில்

அமைச்சரின் குரல்..

என்ன சுதா எல்லாம் திட்டம் போட்டபடி நடந்ததா???

ஆமாம் சார், நீங்க சொன்ன மாதிரியே வந்தாரு.. பேசினாரு .. எல்லாம் முடிஞ்சது..

அதானே, அவன் சபல கேஸ்னு எனக்குத் தெரியுமே... சரி.. எதுவும் பாதுகாப்பு இல்லாமத்தானே நடந்தது...??

ஆமாம் சார்... எந்த பாதுகாப்பும் இல்ல..

குட்...சரிம்மா... நீ இனிமே அந்த தொழிலுக்கு போக வேண்டாம் .. HIV பாசிடிவ் பாதிக்கபட்டோருக்கான அரசு உதவி உனக்கு கிடைக்க ஏற்பாடு பன்னிடுறேன்... அது மட்டுமில்லாம.. .. பேசின மாதிரி 50,000 உன் வீடு தேடி வரும்..

சரிங்க சார். ரொம்ப நன்றி.

கைப்பேசி துண்டிக்கப்பட்டது..

இலவச சைக்கிள் திட்டத்துல, எனக்கு வர வேண்டிய கமிஷன் தொகை 35 லட்சத்தை மொத்தமா அடிச்சு உன் பெயர்ல போட்டுகிட்டா , உன்னை சும்மா விட்டுடுவானா இந்த சாம்பவசிவம்.. வெச்சேன் பாரு உனக்கும் , உன் சந்ததிக்கும் வேட்டு.. நான் அரசியல்வாதிடா.... சிரித்துக்கொண்டே 3 வது ரவுண்ட் ஸ்காட்ச் விஸ்கியை உள்ளே தள்ளினார் சமூக நலத்துறை அமைச்சர்..

ரீது டார்லிங், இப்போ தான் உன் பெயர்ல ஒரு அர்ச்சனை பன்னிட்டு கோயில்ல இருந்து வெளியே வரேன்டா...

எதையோ சாதித்த திருப்தியில், அடுத்த வாரம் தான் திருமணம் செய்ய இருக்கும் பெண் ரீதுவுடன் கைப்பேசியில் பேசிக்கொண்டே , பன்னை வீட்டை விட்டு வெளியே வந்தான் ராஜன்..

முறையற்ற உறவுகளை தவிர்ப்போம் - எய்ட்ஸை ஒழிப்போம்..
.பன்னை வீட்டின் எதிரே இருந்த டிஜிட்டல் பேனர் நியான் வெளிச்சத்தில் மின்னியது

Friday, June 3, 2011

நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று

நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று

ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், அமெரிக்காவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.

..... ஹலோ விக்கி , நான் தான் அப்பா பேசுறேன்..

ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம்பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்ய முடியல.. டோன்ட் வொர்ரிபா

வார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் "நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்கவும் முடியல,

என்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்.

முதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லைபா..

அப்பாஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்.

இல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..

அப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன்
அலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..

உடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..

அண்னா எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு ப்ரோமோஷன் & 20% இன்கிரிமென்ட் வந்திருக்கு..

அவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார்மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..

அடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..

அண்ணா , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட பேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...

உடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..

அப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி, நானும் அண்ணாவும் நாளைக்கு ராம்நாட்ல இருப்போம்.. அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்பா ... ப்ளீஸ்பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..

தொலைப்பேசி துண்டிக்கப்படுகிறது.

போனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்... கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..

மூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..

Monday, May 30, 2011

முதல் கஞ்சா வழக்கு..

திமுக வின் திருச்சி மாவட்ட துணை செயலாளரும், திருவரங்கம் கோவில் அறங்காவலருமான குடமுருட்டி சேகர் இன்று கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (31.05.2011) இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரது காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இரண்டு பிரிவின் கீழ் சேகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் தேர்தல்ல அம்மாக்கு எதிரா ரொம்ப ஆடியிருப்பாரோ??

கடந்த அதிமுக ஆட்சியில் செரீனா , வளர்ப்பு மகன் உள்ளிட்டோர் மீதும் , எதிர்த்து பேசியவர்கள் வீடுகளிலும், கார்களிலும் திடிரென்று கஞ்சா செடி முளைத்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 26, 2011

இப்படியும் ஒரு அமைச்சர்.. வெளங்கிடும் !



இன்றைய அம்மா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் ஆர்.பி.உதயகுமார்,அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல் செல்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இது ஏன் என்று கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அம்மாவே (ஜெயலலிதா) என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா கட்சி அலுவலகத்துக்கு வருவதாலும், சட்டசபைக்கு வருவதாலும், தலைமைச் செயலகத்துக்கு வருவதாலும் அந்த இடம் எனக்கு கோவிலாக தெரிகிறது. அதனால் இந்த 3 இடத்துக்கும் செருப்பு போடாமல் எனது பணியை தொடருகிறேன். வாழ்நாள் முழுவதும் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

உதயகுமார் மாதிரி நாமும் அம்மாவை தரிசிக்கும்போது செருப்பு இல்லாமல்தான் இருக்க வேண்டுமா என, மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்கின்றனர்.

தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இப்படி ஒரு அமைச்சர்.. விளங்கிடும் அந்த துறை..

வேலவன் கமெண்ட் - எல்லா எம்எல்ஏவும் இப்படியே மாறிட்டா . சட்டசபை வாசல்ல செருப்புக்கு டோக்கன் போடுற காண்ட்ராக்ட் எடுத்தா செம கலக்ஷன் பார்க்கலாம் போல இருக்கே !!!!

Thanks - Nakkhheeran.com

Wednesday, May 25, 2011

அழகர்சாமியின் குதிரை - வித்தியாசமான விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை.. ஒரு கவிதை.. பாஸ்கர் சக்தியின் கதை சுசீந்திரன் இயக்கத்தில் அருமையாக வந்துள்ளது. சமீபத்தில் வந்திருக்கும் படங்களில் மிக அருமையானது அ.குதிரை. எண்பதுகளின் பின்னணியில் ஒரு மெல்லிய கிராம கதை. அழகர்சாமியின் மலைக் கிராமமும் பின்னணியில் மலைகளும் கண்களுக்கு இதமோ இதம். அழகர்சாமியின் குதிரையின் வெற்றி இன்னும் பல எழுத்தாளர்களைத் திரைப்படத்துறைக்குக் கொண்டுவரும் என்று நம்பிக்கை தருகிறது . அழகர்சாமியின் குதிரை மூலக்கதையிலிருந்து அங்கங்கே விலகியிருந்தாலும் அது துருத்திக் கொண்டிருக்காமல் இயல்பாய் இருப்பது படத்திற்கான அழகு. பாஸ்கர் சக்தி இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகவும் இருப்பது படத்தின் மற்றொரு பலம் போல் தெரிகிறது. சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம்

பச்சை பசேல் பின்னணியில், கம்பீரமாக நிற்கின்ற வெள்ளை வெளேர் குதிரை , காக்கி சட்டையில் பரட்டை தலையுடன் ஒருவர்.. இருவருக்கும் மேலே வெள்ளை எழுத்தில் படத்தின் தலைப்பான "அழகர்சாமியின் குதிரை" அழகிய வடிவத்தில் மின்னுகிறது.. அதிலும் குதிரை என்ற வார்த்தை பார்க்கும் போதே ஒரு குதிரையை போலுள்ளது.. எழுத்துக்கள் இன்னும் ஒரு 45 டிகிரி சாய்மானத்தில் இருந்திருந்தால் மிக மிக அருமையாக இருந்திருக்கும்

அதே பச்சை பசேல் கிராம பின்னணியில் பரட்டை சுருள் முடியுடன் , வெள்ளை வேட்டி சட்டையில் , அழகான ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில்.. அருகில் குதிரையும் மாலையுடன்.. இவர்களுக்கு மேலே படத்தின் தலைப்பு.. இங்கே குதிரையை விட அந்த பெண்ணும் , பரட்டை தலையில் இருப்பவரும் தான் ஈர்ப்பு . குதிரைக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் இருந்திருக்கலாம்

என்னங்க ஒன்னும் புரியலையா? முதல் பத்தியானது (சிவப்பு நிறம் ) படம் பற்றி மற்ற தளங்களில் வந்த விமர்சனத்தின் தொகுப்பு.. !

இரண்டு மற்றும் மூன்றாம் பத்திகள் (பச்சை) இந்த படத்தினுடைய இரண்டு போஸ்டர்கள் பற்றிய விமர்சனம் ..

பின்ன படமே இன்னும் பார்க்காத, வெறும் ரெண்டு போஸ்டர் மட்டுமே பார்த்த ஒருத்தன் விமர்சனம் பண்ணா இப்படிதானே இருக்கும்.. ! ஆமாங்க இன்னும் படம் பார்க்கவே இல்லை. இதோ கிளம்பிகிட்டே இருக்கேன்.. 4 மணி காட்சிக்கு சத்யம்
காம்ப்ளெக்ஸ்ல.. குடும்பத்தோட.. ! ஆபிஸ்க்கு லீவ் போட்டு போறேன்..

பார்த்துட்டு வந்து வேறு வகைல வித்தியாசமா விமர்சனம் எழுதறேன்.. சரியா??.. வர்டா .. !

ம்ம்ம் மறந்துட்டேன்.. WWW.GOOGLE.COM ல search விண்டோல "அழகர்சாமி குதிரை - விமர்சனம்' நு கொடுத்து தேடு பட்டனை சொடுக்கினா.. நிறைய பக்கங்கள் வருதுங்க.. நான் பார்த்துட்டு வந்து எழுதற வரைக்கும் அதை எல்லாம் படிசிகிட்டு இருங்க .. ஓகே வா..
அவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ் ! ")

அன்புடன்
வேலவன்

Tuesday, May 24, 2011

பதிவர் கிசு கிசு .. சுட சுட !



சூடான பதிவர் கிசிகிசு பத்து



கைரேகை, ஜாதக கட்டு ஸ்பெஷல் "சித்தூ" பதிவர் இப்போதெல்லாம் போயஸ் தோட்டத்து வாசலில் தினமும் ஆஜராகிறாராம் .. அம்மாவிற்கு நிச்சய வெற்றி என்று பலாபலன் பார்த்து தேர்தல் முடிவுக்கு முன்னரே பதிவு செய்த "முன்தேதியிட்ட" பதிவின் காப்பியை கையில் வைத்துக்கொண்டு அம்மாவின் கண்பார்வைக்காக காத்து நிற்கிறாராம்.. நல்லது நடக்கட்டும்.

தமிழுக்கு உண்மையாய் இருக்கும் பதிவருக்கும் , நல்ல நேரம் பார்த்து பதிவு எழுத ஆரம்பித்த பதிவருக்கும் கடும் போட்டி.. செய்திகளை சுட சுட தருவது யார் என்பதில்.. வாரம் இருமுறை தவறாது ஒரு பிரபல புலனாய்வு பத்திரிகை அலுவலகத்தில் நடுநிசியில் கழுகு போல் காத்திருந்து தேவையான செய்திகளை கொத்தி வந்து முதலில் பதிவது யார் என்பதில் தான் போட்டியே.. உண்மையானவர் இதில் முந்துகிறார்.. பிரிண்டிங் மிசின் ஓடும் போதே, அடியில் குனிந்து லென்ஸ் பார்வையால் செய்திகளை கவ்வி விடுகிறாராம்.. பத்திரிக்கை, கடைக்கு வருவதற்கு முன்பே இவர் பதிவில் செய்திகள் சுட சுட வந்துவிடுமோ என்று பத்திரிக்கை அலுவலகம் பரபரத்துக்கிடக்கிறது

அதிர்ஷ்ட பார்வை பதிவர் ஏக கடுப்பில் இருக்கிறார்.. மே 13 க்கு பிறகு எந்த பதிவு போட்டாலும் கூடி குமியடிக்க அனானிகள் குவிந்து விடுவதால் பதிவுகள் போடமுடியாமல் திணறுகிறார்.. பல முன்னணி பதிவர்களே அனானிகளாக கும்மியடிப்பதில் ஏகத்துக்கும் கிர்ர்ரடித்து கிடக்கிறார் .. சில நாட்களுக்கு அரசியல் சாயல் இல்லாமல் குலுக்குவார்பட்டி , மஸ்கூட்டா போன்ற பதிவுகளை மீள்பதிவு செய்யாலாமா என்று ஆழ்ந்த சிந்தனையில் உள்ளார்.

விருச்சிக ராசியில் பிறந்த காந்த பதிவர் பதிவை தற்காலிகமாக மூடிவிட்டு ஒதுங்கி இருக்கலாமா என்று தீவிர சிந்தனையில் இருக்கிறார்.. தொட்டது துலங்காது போனது மட்டுமில்லாது, "கோ" வான "கிருஷ்ண" பதிவரும் , "R K நகர் பதிவரும் கண்டுபிடிச்சேன் , கண்டுபிடிச்சேன் நீ யாருன்னு நானும் கண்டுபிடிச்சேன் நு கோரஸாக பாடியதாலும், பல பஸ்சுகள் மாறி மாறி வந்து இடிப்பதாலும் இந்த முடிவாம் .. அநேககமாக அடுத்த தேர்தல் வரை மூடு விழா இருக்கும் என தெரிகிறது.

குதிரையில் வரும் பதிவர் எடுத்து வரும் சண்ட்விச்ல், நான் வெஜ் மட்டுமில்லாது வெஜ் சாண்ட்விச்சில் கூட இப்போதெல்லாம் நான் வெஜ் நெடி கலந்து மிக காரமாக இருப்பதால், அவரது பதிவுக்கு தடா போடலாமா என்று பிரபல பெண் பதிவர்கள் அனைவரும் கூடி கூடி பேசி வருகிறார்கள். மருத்துவ குணம் உள்ள செடி பதிவர் மற்றும் சமையல் குறிப்பு பதிவர் தான் இந்த கூட்டங்களுக்கு தலைமையாம்.

பறவைகள் சரணாலய பதிவர் சமீப காலமாக தன் பதிவுக்கு எக்கச்சக்கமாய் விழும் வாக்குகளை பார்த்து அசந்து போய் விட்டாராம்.. சரணாலயத்துக்கு போகும் வழியில் இருக்கும் பிரபல அம்மன் கோவில் தான் இதற்கு காரணம் என்று, ஏதாவது நேர்த்திக்கடன் செய்ய விரைவில் கோவிலுக்கு விசிட் அடிக்கும் மூடில் இருக்கிறாராம். துனைக்கு வரும்படி poem street பதிவரை அழைக்க , அவரோ, எனக்கும் அந்த மாதிரி ஓட்டு விழட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று இழுத்தடிக்கிறாராம் .

அரிசி மாவு , உளுந்து மாவு பலகார பதிவு கை மாறியதில் இருந்து பதிவுகள் கார சட்னியிலிருந்து தேங்காய் சட்னிக்கு மாறியது போல் சப்பென்றாகிவிட்டது.. இதில் அப்செட் ஆன வாடிக்கையாளர்கள் எங்கே மஞ்சள் கமென்ட் பச்சை கமெண்ட்டாக மாறிவிடுமோ என்றும் கலக்கத்தில் உள்ளதால் , வியாபாரம் படுத்துவிட்டது . மீண்டும் கைமாற்றிவிடலாமா என்ற சிந்தனை வரத்துவங்கியுள்ளதாம் இந்நாள் ஓனருக்கு.

கருப்பு சிவப்பு கட்சிக்கு சனிபெயர்ச்சி தொடங்கி இருப்பதை அடுத்து மணியான பதிவர், புதுக்கோட்டை மழை சாரல் பதிவர், ஜெய்ச்சவனுக்கு எதிர்பதமான "மணிவண்ணன்" ஸ்டைல் பதிவர், சொல்லில் குற்றம் கண்டுபிடிக்கும் ராமனின் எதிரி பதிவர், நாலாம் வகுப்பு பாஸ் பண்ண பதிவர், தினமணி பதிவர், freedom பதிவர், கடற்கரை மணலில் வேகமாக ஓடுவதை நோண்டும் பதிவர், அனுபவிச்சு ஜோசியம் பார்க்கும் பதிவர் உள்ளிட்ட பல பதிவர்கள் கலந்துக்கொள்ளும் மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு நடக்கிறதாம் .. இதற்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று ட்ரிப்பில் செவென் பதிவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாராம் , கொசுறு செய்தி - 1 . இந்த விழாவில் "1966 - சமீபத்திய " முதிய பதிவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது.. சமீபத்திய மனதை நிறைவடைய செய்த விஷயங்கள் அனைத்துக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயரே துணை என்று மகிழ்ந்து போய் இருக்கிறார் அந்த பதிவர்.
கொசுறு செய்தி 2 . உண்மையான தமிழுக்கு சொந்தக்கார பதிவர் ஒதுங்கியுள்ளராம்.. கலந்துக்கொள்ள மனம் நிறைய ஆசை தளும்பி வழிந்தாலும் , ஏற்கனவே பதிவர் சந்திப்பின் அனுபவங்கள் அவரை ஒதுங்கி இருக்க செய்கிறதாம்..



கொசுறு செய்தி 3 . மேலும் பல பதிவர்கள் இந்த விழாவில் கலந்துக்கொள்ள விரும்பி வீட்டில் இப்போதே பெரிய சைஸ் துண்டு , மற்றும் ஹெல்மெட் வாங்கி வைத்து இருக்கிறார்களாம்




மழைக்கடவுள் பதிவருக்கும் , கிங் பாண்ட் (KING POND) ல் இருந்து வந்து அனைவரையும் கலாஸும் பதிவருக்கும் யார் அதிக ஹிட் வாங்குவது என்பதில் கடும் போட்டியாம்.. இந்த நிமிட் வரை கிங் பாண்ட் சற்று முன்னிலையில் இருப்பதாக கேள்வி . போட்டியில் சற்று உணர்ச்சி வசப்பட்டு விடுவதால் இருவரின் சில சமிபத்திய பதிவுகளில் அதிக மைனஸ் ஓட்டு விழுவது வாடிக்கையாடிவிட்டது.. இருந்தும் மைனஸ் ஓட்டில் கூட பிரபலம் ஆகும் வாய்ப்பு இருப்பதால் அதையும் மகிழ்ச்சியாகவே இருவரும் ஏற்பதாக தெரிகிறது

அறுபடை வீட்டு கடவுளின் ஆயுதத்தை பெயரில் கொண்ட பதிவருக்கு பிரபல சினிமா கூத்தாடும் பத்திரிகையில் கிசு கிசு எழுதும் பகுதியில் வேலைகிடைக்கும் வாய்ப்பிருப்பதால் , அச்சாரமாக வலைப்பதிவர்கள் பற்றி இட்டுகட்டி கிசு கிசு எழுதி பயிற்சி பெரும் யோசைனையில் இருக்கிறார்.. இந்த பதிவை நீங்கள் படிக்கும் வேளையில் கூட அவர் பதிவு பப்ளிஷ் செய்யப்பட்டு , பலர் அவருக்கு டின் கட்டியிருக்கலாம் என்று தமிழ்மண பட்சி படபடக்கிறது ..

டிஸ்கி , முஸ்கி , பஸ்கி- யார் மனைத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல இது என்பதை படிக்கும் அனைவரும் புரிந்துக்கொள்வீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்..

மேலும் பல பதிவர் கிசு கிசு விரைவில்..

அன்புடன்
வேலவன்

Sunday, May 22, 2011

தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்

திருச்சி அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்க திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடலூர் பிரிவு அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர்.

பி.ஏ., வரலாறு பட்டதாரியான மரியம் பிச்சை திரைப்பட வினியோகஸ்தராக இருந்த மரியம் பிச்சை திரையரங்கையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு தான் அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை அவர்கள் எதிர்பாராவிதமாக அகால மரணம் அடைந்தது மிகுந்த துயரமான சம்பவம். அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Saturday, May 21, 2011

விடுகதை ௦புதிர் - லட்சம் பரிசு



இந்த புதிருக்கு சரியான விடை தெரியுமா? ?? தெரிந்தால் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்.. சரியான விடை சொல்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தரப்படும்...

அப்படியே ஒரு ஒட்டு போட்டு நெறைய பேருக்கு அந்த பணம் கிடைக்க வழி செய்யுங்கள்

Friday, May 20, 2011

ஒரு நிமிட கதை

சுதா, பசங்க தூங்கிட்டாங்களா பாரு.. டீ வி யில் இருந்து கண் அகற்றாமல் மனைவியிடம் கேட்டார் சுந்தரம்.

இன்னும் இல்லைங்க.. பெரியவன் ஏதோ புத்தகம் படிக்கிறான், சின்னது கம்ப்யூட்டர் கேம் விளையாடிட்டு இருக்கு..

அய்யோ.. மனி 10 ஆகுது இன்னும் தூங்காம என்ன பன்னுதுங்க இதுங்க.... நம்ம அவசரம் இதுகளுக்கு எங்கே புரியுது.. அங்கலாய்த்துக்கொண்டார் சுந்தரம்.

சீக்கரம் தூங்கவைமா , மனைவியிடம் சிடுசிடுத்தார்…

என்னங்க தெரியாம தான் கேக்கறேன் , ஒரு நாளைக்கு கூட இது இல்லாம இருக்க முடியாதா உங்களுக்கு ?

அய்யோ சுதா, உனக்கே தெரியும்ல , இது இல்லாம எப்படிம்மா என்னால … ப்ளீஸ் ப்ளீஸ்.. கெஞ்ச ஆரம்பித்தார்..

சரி சரி இருங்க.. உள்ளே சென்ற சுதா, 15 நிமிடத்தில் குரல் கொடுத்தாள். ஏங்க, பசங்க தூங்கிட்டாங்க..

நிம்மதி பெருமூச்சு விட்டபடி சுந்தரம், தன் சட்டை பாக்கட்டை துழாவி சிகரெட்டும் , தீப்பெட்டியும் வெளியே எடுத்தார்..

அப்பப்பபா, பொது இடத்துல புகைப்பிடிக்க கூடாது அரசாங்கம் சட்டம் போட்டு… பசங்க முன்னாடி பிடிக்ககூடாதுனு வீடல பொன்டாட்டி சட்டம் போட்டு.. நம்மள இப்படி கஷ்டப்பட வெக்குறாங்கடா.. முடியல சாமி…

அலுத்துக்கொண்டே ஆனந்தமாய் புகையை இழுத்துவிட்டர் சுந்தரம்..


அன்புடன்
வேலவன்



பிடித்திருந்தால் ஒரு வரி கருத்து .. ஒரு ஒட்டு ப்ளீஸ்

கனிமொழி கைது



கனிமொழி கைது.


அலைக்கற்றை வழக்கில் இன்று சி பி ஐ நீதிமன்றத்தில் ஆஜரான கனிமொழி ஜாமீன் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின் படி கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்.

கலைஞர் டி வி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைது.

தேர்தலிலும் தோல்வி என்ற சூழலில், தி மு க என்ன வித முடிவு எடுக்கும்.. காங்கிரசுடன் உறவு என்னவாகும் என்பதே இப்போதைய பரபரப்பு..

Wednesday, May 18, 2011

ஜெ- கண்டணத்துடன் கழட்டிவிடப்பட்ட முதல் கூட்டணி கட்சி..

அம்மா தன் அதிரடியை ஆரம்பித்து விட்டார்..

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க ௧௬ எம் எல் ஈக்கள் வேண்டும் என்ற நிலையில், சுயேட்சை வேட்பாளர் வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்ததால் தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.

இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் ஜெயலலிதா கண்டனம் தெரிவத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் அதிமுக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் போட்டியிட்டது. இதில் 15 தெட்குதிகளில் என்ஆர் காங்கிரசும், 5 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆட்சியில் தங்களை சேர்க்காமல், என்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே ஆட்சி அமைத்து, தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. தான் தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு அவர் இதுவரை வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும், புதுவையில், அதிமுக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் முடிந்த கையேடு கூட்டணி கட்சிகளை கழட்டி விடுவது அம்மாக்கு புதிதில்லை என்பது அனைவரும் அறிந்தது.. அடுத்த தேமுதிகவா என்பதே இப்போதைய கேள்வி ..
முதலில் சட்டசபை மாற்றம், இப்போ கூட்டணி கட்சி கழட்டிவிடப்படுதல் .. அம்மா மாறிவிட்டார் என்று முழுமனதுடன் சொல்லமுடியவில்லை.

அம்மா மாறுவாரா ??? உங்கள் கருத்து என்ன ?

Tuesday, May 17, 2011

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க



அம்மா அரசுக்கு எதிரா முதல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.. பொதுநல வழக்கு போடுவதற்கென்றே சிலர் இருக்கின்றார்கள். அதில் முதன்மையானவர் திரு டிராபிக் ராமசாமி. பொதுமக்களை பாதிக்கும் எந்த பிரச்சனையானாலும் தைரியமாக நீதிமன்ற படியேறிவிடுவார் . பலமுறை சிக்கல்களில் சிக்கி கொண்டாலும், பொதுநல வழக்கு தொடருவதில் இருந்து மட்டும் அவர் பின்வாங்கவில்லை. இந்த முறை திருவாரூரில் சுயேட்சையாக போட்டியிட்டார்.. எவ்வளவு வாக்குகள் வாங்கினார் என்று தெரியவில்லை..

இப்போது அம்மா (அதிமுக) அரசுக்கு எதிராக முதல் பொது நல வழக்கு பதியப்பட்டுள்ளது.. இந்த முறை திரு டிராபிக் ராமசாமி அல்ல... வழக்கை பதிந்திருப்பவர் வக்கீல் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தி .

சட்டசபையை புதிய வளாகத்திலிருந்து (ஓமந்தூரார் தோட்டம் ) பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் அம்மாவின் செயலுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்ற கதவை தட்டியுள்ளார்..

இடவசதி குறைவு என்று காரணம் காட்டி கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவே, வேறு இடங்களில் தலைமை செயலகம் / சட்டசபை கட்ட முடிவுசெய்தார். பின்பு வந்த அரசாங்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் பல ஆயிரம் செலவில் அனைத்து வசதிகளுடன் புதிய சட்டசபை கட்டியுள்ளது.. ஆனால் ஜெயலலிதா மீண்டும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்த ஏற்பாடுகள் செய்வது சரியல்ல.. மேலும் செம்மொழி நூலகத்தை இடமாற்றம் செய்வதால் பல புத்தகங்கள் பாழாகிறது.. புதிய கட்டிடத்தை என்ன செய்ய போகின்றார்கள் என்றும் தெளிவில்லை. இது சட்ட விரோத, அங்கீகாரமற்ற , பொது நலனுக்கு எதிரான செயல்.

தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.

விதி 110 ன் கீழ் சட்டசபை மாற்றம் வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஜெயலலிதா தகுந்த காரணங்கள் சொல்லிவிட்டு , மீண்டும் சட்டசபை மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை சட்டசபை மாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்..

பார்க்கலாம் நீதிமன்றம் என்ன சொல்கிறதென்று.. அம்மா அரசின் மீதான முதல் வழக்கில் சாதகமான முடிவா, பாதகமான முடிவா என்று..

அன்புடன்
வேலவன்

Monday, May 16, 2011

தி மு க வே இம்முறை வென்றது..

மசாலா திரைப்படத்தின் அம்சங்களுடன், எதிர்பாராத க்ளைமாக்ஸ்சுடன் இனிதே முடிவடைந்துவிட்டது தமிழக தேர்தல் திரைப்படம்.. ஜனநாயகத்தின் எஜமானர்கள் இந்த முறை பணநாயகத்துக்கு முன்னுரிமை தராமல் வாக்களித்து இருப்பது மிகப்பெரிய ஆறுதல்.

ஒரு மாத காலம் ரகசியத்தை அடைகாத்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க வாக்குபெட்டிகள் திறக்கப்பட்டபோது அனைவரையும் வாய் பிளக்க செய்தது. அனைத்துவிதமான கணிப்புகளையும் பொய்யாக்கி புரட்டிபோட்டுள்ளது மக்கள் தீர்ப்பு.

வெற்றி பெற்ற அம்மா மிகுந்த சந்தோஷதுடம் பதவி ஏற்றுவிட்டார்
,தோல்வி அடைந்த கலைஞர் "மக்கள் அளித்த ஓய்வு" என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். பொது ஜனம் வாக்களித்துவிட்டோம், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அவர்களின் வயிற்று பிழைப்பை பார்க்க போய்
விட்டார்கள்.. அரசியல் ஆர்வலர்களும் , பதிவர்களும் மட்டுமே எப்படி நடந்தது இது என்று தலையை பிய்த்துக்கொண்டு அவரவர் ஒரு கருத்தை பதிவு செய்கிறார்கள். அந்த வகையில் என் பதிவு..

இதுவரையில் இப்படி ஒரு அமைதி புரட்சியை என் அனுபவத்தில் பார்த்ததில்லை. 1996 தேர்தலில் அம்மா துடைத்து எறியப்படுவார் என்பது கன்னியாகுமரி முதல் சென்னை வரை பளிச் என்று தெரிந்தது. அந்த தேர்தலில் திமுகவின் வெற்றி எத்துனை வாக்குகள் வித்தியாசத்தில் என்பது மட்டுமே வாக்கு எண்ணிக்கை நாளன்று பார்க்கப்பட்டது .. அதே போல 2001 , 2006 தேர்தல்களிலும் முடிவுகள் பெரும்பான்மையானோர் யுகித்தபடி இருந்தது.. 2011 என்பது தான் உண்மையிலேயே மௌன புரட்சி என்று சொல்லவேண்டும், அந்த வகையில் தமிழக வாக்காளர்கள் விவரமானவர்கள் , சில சமயம் அதிகார, பண நாயகத்துக்கு சறுக்கினாலும் மீண்டும் சுதாரித்து எழுந்து விட்டார்கள்.

என்னை பொறுத்தவரையில் இது திமுகவின் வெற்றி என்றே சொல்லுவேன். ஏன் என்று கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன் கலைஞரிடம் சில விஷயங்கள்

கலைஞரே , எங்கே சறுக்க ஆரம்பித்தீர்?? மொத்தமாக எங்கே சறுக்கி அதளபாதாளத்தில் விழுந்தீர் என்று உங்களுக்கே நன்றாக தெரியும்.. அரசியலில் பழுத்த பழம், அரசியல் நெளிவு சுளிவு அத்துப்படியான உங்களுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஆனாலும் சூழ்நிலை கைதியான நீங்கள் வேறு வழி இன்றி அனைத்துக்கும் சப்பைக்கட்டு கட்டிகொண்டே வந்ததன் விளைவு இந்த "ஓய்வு" .

பத்து , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதிக்கு அழகிரி என்றொரு மகன், கனிமொழி என்று மகள், ராஜாத்தி என்ற துணைவியார் இருக்கின்றார் என்பதெல்லாம் செவி வழி செய்தியாக மட்டுமே இருந்தது. மீடியாக்களின் ஆதிக்கம் அதிகமில்லாத அந்த காலத்தில் பெரும்பாலனவர்கள் உங்களின் வாரிசுகளை பற்றி பெரிதும் அறிந்திருக்கவில்லை.

எதிர்கட்சிகள் கூட ஸ்டாலின் என்ற ஒற்றை மனிதரை முன்னிறுத்தியே "வாரிசு அரசியல்" என்ற அம்பை உங்கள் மீது எய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வாரிசு அரசியல் என்பது மக்களால் புறம் தள்ளப்பட்டதுக்கான சாட்சி தான் ஸ்டாலின் பெற்ற வெற்றிகள். கட்சியினரும் ஸ்டாலினை முழுமனதாக ஏற்றுக்கொண்டதும் அவர் தி மு க தலைவரின் மகன் என்ற காரணத்தை காட்டிலும் தி மு க விற்காக இளம் வயதில் இருந்து உழைத்தவர் என்பதே.

ஆனால் , இந்த பத்தாண்டுகளில் தான் வாரிசு அரசியல் தன் அடுத்த பரிமாணத்துக்கு சென்றது , ஆம் குடும்ப அரசியலாக தன்னை நிலைநாட்டியது.. முரசொலி மாறனின் மறைவிற்கு பிறகு தயாநிதி உள்ளே நுழைந்தார் , கனிமொழி , அழகிரி என்று அடுத்தடுத்து வாரிசுகள் உள்ளே நுழைந்த போது தான், திமுகவின் தலைமை மட்டுமே அதிகார மையம் என்றிருந்தது மாறி, தென் மண்டலம் , வட மண்டலம் என்று பிளவுபட்டு நின்றது. தலைவரின் வழி நின்று அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தங்களின் பிள்ளைகளையும் அரசியலில் இழுத்துவிட, வட , தென் என்பதையும் தாண்டி குறுநில மன்னர்கள் போல் ஆங்காங்கே அதிகார மையங்கள் தோன்றியது.. இது ஆபத்தில் முடியும் என்று உங்களுக்கு தெரிந்த போதிலும் கேட்க முடியாத சூழ்நிலையில் கைகட்டி மௌனியாகவே வேடிக்கை பார்த்தீர்.

ஸ்டாலின் வருகையை ஆரவாரத்துடன் வரவேற்ற அதே தொண்டன் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு கண்டு உள்ளேயே புழுங்கினான், தொண்டன் அல்லாத தி மு க அபிமானிகள் முகம் சுளிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பின் வாசல் வழியாக கனிமொழிக்கு பதவி வந்த போது உதட்டளவில் சிரித்து , மனதளவில் குமுறிய தொண்டனும், விட்டுக்கொடுக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அடுத்தவரிடம் ஏதோ சால்ஜாப்பு சொன்ன தி மு க அபிமானிகளும் ஏராளம் ஏராளம். கட்சி சார்ந்த , பொது மற்றும் சில அரசு சார்ந்த விழாக்களின் போஸ்டர்கள், மேடைகளில் ராசத்தியம்மாவும் , தயாளுஅம்மாவும் இடம் பெற்றதுதான் உச்சக்கட்டம். அமைச்சர்கள் பலரும் உங்களை விடவும் உங்களின் மனைவி துனைவிகளிடம் அரசியல்,ஆட்சி, அதிகாரம் பற்றி பேசி காரியம் சாத்திக்க முடியும் என்ற நிலை வந்தபோதாவது நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும்.

ஸ்டாலின் வருகையை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கூட அடுத்தடுத்து வந்த அதிகார மையங்களை ரசிக்கவில்லை என்பதும் , அதை பற்றி உங்களுடன் என்ன விதமான கருத்துக்களை சொல்லி இருப்பார்கள் என்பதும் உங்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்.

ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் எடுபடவில்லை என்று எதிர்கட்சிகள் அங்கலாய்த்த நேரத்தில் வராது வந்த மாமனிகளாக வந்தவர்கள் தான் தயாநிதி, அழகிரி, கனிமொழி, மனைவி , துணைவி.. கயல்விழி. உங்கள் மீது எறிய எதிர்கட்சிகளின் கைகளில் நெல்லிக்கனி அளவில் இருந்த வாரிசு அரசியல் என்ற கூழங்கல்லை மக்கள், கட்சியினர் வலுக்கட்டாயமாக கிழே போட வைத்த வேளையில் இந்தா பிடி என்று நீங்களாகவே திணித்தது தான் குடும்ப அரசியல் என்ற பாறாங்கல். கூழங்கள் வைத்தே உங்களை பதம் பார்த்தவர்கள் , பாறாங்கல் கிடைத்தால் சும்மா விடுவார்களா??

மீடியாவின் ஆதிக்கம் இல்லாத போது அடங்கி இருந்தவர்கள், மீடியாக்கள் பெரு வளர்ச்சி பெற்ற கால கட்டத்தில் வெளிவந்து போட்ட ஆட்டத்தின் விளைவு தான் உங்கள் குடும்பம் அக்டோபஸ் உருவம் பெற்று வார இதழ் முதல் இணையம் வரை பரவி கிடக்கிறது.

தமிழகத்தை பொறுத்த வரை மீடியா வளர்ச்சிக்கு முக்கிய காரணி உங்கள் குடும்ப தொலைகாட்சி "சன் டிவி" என்றால் மிகையாகது.. அதே மீடியா உங்களின் குடும்ப அரசியலை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு கடைகோடி குக்கிராமத்துக்கும் எடுத்து சென்றது தான் கொடுமை.. அதுவும் நீங்கள் கொடுத்த இலவச தொலைக்காட்சியே அதை செவ்வனே செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை

அதிகார மையம் ஏற்பட்டுவிட்டது சரி.. ஆட்டம் போடாமல் இருந்திருக்கலாம் அல்லவா ??

ஒரு சர்வே மதுரையில் மூன்று உயிர்களை பலிவாங்கியதே. தினகரன் ஊழியர் என்பதால் அவர்கள் தி மு க அபிமானிகளாக இருக்க கூட வாய்ப்பு இருந்தது.. தருமபுரி பஸ் எரிப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன வேறுபாடு? அங்கே இறந்தது பெண்கள், இங்கே இறந்தது ஆண்கள் என்பது தவிர்த்து ?

இந்த துயர சம்பவத்தில் உங்களின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும்? "அதுக்குத்தான் அப்போவே சர்வே வேண்டாம் என்று சொன்னேன் , கேட்கவில்லை" என்ற ஒற்றை வரியில் முடிதுக்கொண்டிர்களே .. அதன் விளைவு தான் இன்று "எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் " என்று அதே ஒற்ற வரியில் சொல்ல வைத்திருக்கிறது..

உங்களுக்கு கண்கள் பனித்து நெஞ்சம் இனித்த போது உங்கள் தொண்டர்களுக்கும் , தி மு க அபிமானிகளுக்கும் கண்கள் எரிந்தது , இதயம் வெடித்தது என்ற உண்மையை இப்போதாவது உணருங்கள்.

ஒரே ஒரு டி குடித்துவிட்டு தலைவர்களின் ஆணையேற்று மாடாய் உழைத்தவன் திமுக தொண்டன் என்பது வரலாறு.. ஆனால் இன்று அப்படி அல்ல .. அவனும் சிந்திக்கிறான்.. குடும்ப ஆதிக்கம் என்று எதிர்கட்சிகளும், பொது ஜனமும் சொல்லிடும் போது அவனுக்கும் உண்மை தெரிகிறது.. நியாயமான அயர்ச்சி ஏற்படுகிறது.. விளைவு அவன் முழுமையாக தேர்தல் வேலைகள் செய்வதில்லை..

தேர்தல் முடிந்த பின்பு கூட ஒரு விழாவில் என் குடும்பத்தினர் திரைத்துறையில் வந்தால் மட்டும் சிலருக்கு கசக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளீர்கள். ஏ வி எம் குடும்பம் இல்லையா என்று கேள்வி வேறு.. கலைஞரே, காலம் காலமாக திரை படத்தயாரிப்பிலே ஊறி போன ஏவிம் , தேவர் பிலிம்ஸ் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் வருவதற்கும், 70 களில் திரைக்கதை வசனம் மட்டுமே எழுதி, சில படங்கள் தயாரித்து , வாங்கி, பின்னர் பொதுவாழ்விலேயே காலம் கழித்து வரும் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிவைத்தார்போல திரைப்படம் தயாரிக்கவும், விநியோம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது உங்கள் மனதுக்கு தெரியாத ஒன்றா என்ன? வந்துவிட்டார்கள் , அடக்கமுடியவில்லை.. அதனால் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று பேசிவிட்டீர்.. அப்படிதானே?

உங்கள் வாரிசுகளின் தயாரிப்பில் முன்னணி நடிகர்கள் நடித்தார்கள்.. ரஜினி கமல் முதல் சூர்யா கார்த்தி விஜய் அஜித் தனுஷ் வரை.. உண்மைதான்.. அது அவர்கள் தொழில், வரும்படி எங்கு வந்தாலும் நடிப்பார்கள்.. கையில் காசு பார்த்ததும் போய் கொண்டே இருப்பார்கள்.. அதுக்காக, ஒட்டுமொத்த திரைதுரையுமே உங்கள் பின்னாலே வந்துவிடும் என்று நீங்கள் நினைத்து விட்டதை தான் ஜீரணிக்க முடியவில்லை.

பாசதலைவனுக்கு பாராட்டு விழாவெல்லாம் அரிதாரம் போட்ட ஒப்பனை முகம் தான் , உள்ளே இருந்த காயங்கள் , தழும்புகள் உங்கள் கண்ணனுக்கு தெரியாமலே மணிகணக்கில் உட்கார்ந்து ரசித்து விட்டு வந்த உங்களை என்ன என்று சொல்வது..

அப்போது கூட புண்ணியவான் அஜித் உங்களுக்கு ஒரு அபாய சங்கை ஊதினார்.. பாசக்கார பயபுள்ளைகள் அடித்த ஜிங்குச்சா சத்தம் நிறைந்திருந்த உங்கள் செவியின் வழியில் அந்த அபாய சங்கு உங்க மூளையை எட்டமுடியாமல் முனங்களோடு திரும்பிவிட்டது.

குடும்ப ஆதிக்கம் பற்றியே பதிவு செய்ய நினைத்தேன், ஆனால் உங்கள் விழ்ச்சிக்கு குடும்ப ஆதிக்கத்துக்கு இணையாக வந்த மற்றொரு காரணம் மின்வெட்டு .. அதை பற்றி சில வரிகள்..

மின்பற்றக்குறை - அமைச்சர்களிலேயே அதிகமாக விமிர்சிக்கபட்டவரும் கேலி செய்யப்பட்டவரும் உங்களின் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான். இது ஏதோ இந்த ஆண்டில் மட்டுமல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தை முடக்கி போட்டது. "இருட்டுத்துறை" "மின்வெட்டு" அமைச்சர் என்று வீராசாமிக்கு பெயர் வாங்கி தந்த அளவுக்கு கை மீறி போனது.. நகரம் சம்மரில் அவதிப்பட்டது, கிராமங்கள் வருடத்தில் 10 மாதங்களும் மின்வெட்டில் அவதிப்பட்டது.. வெயில் காலங்களில் மக்கள் காற்று இல்லாமம் புழுங்கிய புழுக்கமும் , அவர்கள் அனுபவித்த அனலும் தான் இப்போது உங்கள் அரசை பொசுக்கிவிட்டது..

மின்வெட்டு விஷயத்தில் எப்போதும் முந்தைய அரசையே குறை சொன்ன நீங்கள் அதற்கு பதில், என்னென்ன செய்திருக்கலாம்? அரசு விழாக்களில் மின் உபயோகத்தை குறைத்திருக்கலாம், பாலங்களை திறக்கும் போது அவை பல நாட்கள் மின் வெள்ளத்தில் சொலிக்க விட்டதை தவிர்த்திருக்கலாம்.. பகல் முழுது தேவையின்றி சாலைகளில் எறிந்த சோடியம் விளக்குகளை நிறுத்த செய்திருக்கலாம். மத்திய தொகுப்பில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கி இருக்கலாம்.. குறைந்த பட்சம்.. விழாக்களில் / திருமணங்களில் மின் உபயோகத்தை கட்டுப்படுத்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கலாம் .. அதை எல்லாம் விடுத்து கடைசி வரையிலும் வெறுமனே அதிமுகவை குறை கூறிகொண்டே இருந்தால் போதும் என்று மெத்தனமாக இருந்துவிட்டீர்.. பிரசாரத்தின் போது மின்வெட்டால் பலருக்கு வாகனங்களில் கைக்கூப்பி வந்த தி மு க வேட்பாளர் முகம் கூட தெரியாமல் போனது தான் சாதனை..

சரி மக்களே பொறுமையாக படித்தமைக்கு நன்றி - இப்போ தலைப்பின்படி தி மு க வென்றது.. ஏன்? 2011 - இந்த முறை கலைஞர் வென்றிருந்தால் , அது தி மு க வின் உண்மையான வெற்றி கிடையாது.. அது கலைஞரின் குடும்பத்துக்கு , தி மு க அமைச்சர்களின் குடும்பங்களுக்கு, மாவட்ட செயலாளர் குடும்பங்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமே .. ஒரு பத்தாயிரம் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றி மட்டுமே.

இந்த தோல்வி நிச்சயம் கலைஞரை , தி மு க முன்னணி தலைவர்களை சிந்திக்க வைக்கும்.. தவறுகள் திருத்தப்பட ஒரு வாய்ப்பு.. தி மு க மீண்டும் எழுந்து வர வாய்ப்பாக அமையும்.. திமுக சுயபரிசோதனை செய்ய கிடைத்த பொன்னான காலம். மீண்டும் பழைய வேகத்தோடு எழும் சந்தர்ப்பம். கலைஞர் ஓரளவுக்கு (கூட்டணி ஆட்சி) வென்றிருந்தால் அவருக்கு இது பற்றி சிந்தித்து பார்க்க கூட நேரம் இருந்திருக்காது . கட்சியும் விரைவிலேயே கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இந்த தோல்வி "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற ஒரு கட்சிக்கு, அந்த கட்சியின் லட்ச கணக்கான தொண்டர்களுக்கும் , லட்சகணக்கான அபிமானிகளுக்கும் கிடைத்த வெற்றியே.

திமுகவிற்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல.. இதைவிட அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறது.. பதினான்கு வருடம் கட்சி தோல்வியை மட்டுமே ருசித்த போதும் கட்சியை சிதைந்து போகாது காத்த பெருமை கலைஞருக்கு உண்டு.. அந்த வகையில்,

குடும்ப அரசியல்,அதிகார மையத்தை உடைத்து எறிந்து மக்களாலும் , கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து , நீங்களும், பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்கள் பின்னல் இருந்து வழி நடத்தினால்.. 2016 அல்ல, 2014 உங்கள் வசமாகும் என்பதே அனைவரின் ஆசை. அதே நேரத்தில் செய்வீர்களா என்பதே ஓவ்வொரு தொண்டனின்,அபிமானியின் கேள்வியும்,


காலம் பதில் சொல்லட்டும்..




இது என்னளவிலான கருத்து , உங்கள் வாதத்தை கருத்து பெட்டியில் மறக்காமல் சொல்லவும்..
பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போடுங்கள்..




நன்றி
வேலவன்

Saturday, May 14, 2011

2011 தேர்தல் முடிவு - கார்டூன்






முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்..





அன்புடன்
வேலவன்

Friday, May 13, 2011

2011 தேர்தல் - ஒட்டு மொத்த பதிவர்களும் அடைந்த படுதோல்வி

ஒட்டு மொத்தமாக பதிவர்கள் அனைவரும் யாரும் எதிர்பாராதபடி தோல்வி அடைந்து விட்டனர். நாளை எப்படி எல்லாம் பதிவு போடவேண்டும், எப்படி பட்ட படங்கள் தேவை என்று யோசித்து பதிவு போட தேவையான படங்களை எல்லாம் கூகுளாண்டவர் துணையுடன் தரவிறக்கி ரெடியாக வைத்தனர்.. அதிமுக வெற்றி பெற்றால் என்ன தலைப்பு போடுவது, தி மு க ஜெயித்தால் என்ன தலைப்பு. எந்த படம் பொருத்தமாக இருக்கும், மற்றவர் பதிவில் கமென்ட் என்ன போடாலாம்.. திமுக ஜெய்க்கும் என்று பதிவிட்ட பதிவர்களுக்கு என்ன பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக பதிவர்களும், அதிமுக வெற்றி என்று பதிவிட்ட அதிமுக பதிவர்களுக்கு என்ன பதிலடி தரலாம் என திமுக பதிவர்களும் ..

அதிக ஹிட் அடிக்க சுட சுட ரிசல்ட் எப்படி கொடுக்கலாம் என்ற சிந்தனையோடே அனைத்து பதிவர்களும் மே 12 நள்ளிரவு வரை யோசித்து யோசித்து பாதி தூக்கம் தொலைத்துவிட்டு , பின்பு தான் உறங்க போனார்கள் ..

சில பதிவர்கள், தேர்தல் முடிவுகளை சுட சுட தருவதற்கென்றே வாடகைக்கு லேப்டாப் எடுத்ததும், தங்களின் கணினியை சர்வீசுக்கு கொடுத்ததும் நடந்ததாம்.

மே 13 இணையத்துக்கு வந்து ப்ளாகரை திறக்க முயற்சி செய்த போது வந்தது சோதனை.. பிளாக்கர் தளம் இயங்காது முடங்கி இருந்தது கண்டு பதிவர்கள் கதிகலங்கி தவித்து போனார்கள்.. சரி பதிவுதான் போட முடியவில்லை.. தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளுக்கு போய் கருத்து பெட்டிகளை நிரப்பலாம் என்று பார்த்தால், ஒன்றிரண்டு பதிவுகள் தவிர்த்து திரட்டிகள் எல்லாம் ஏப்ரல் , மே பெண்கள் கல்லூரி சாலைகளை போல வெறிச்சோடி, களையிழந்து கிடந்தது .. அது பார்த்து , அடேங்கப்பா , எனக்கு மட்டும் பிரச்னை இல்லை.. எல்லா பயபுள்ளைக்கும் இதே அவஸ்தை தான் போல என்ற சின்ன திருப்தி மட்டுமே பதிவர்களுக்கு மிஞ்சியது..

இது தான் பிளாக்கர் கொடுத்த ஷாக்


மொத்தத்தில் ஐயா ஆட்சியில் மின்வெட்டு, அம்மா ஆட்சியின் துவக்கத்திலேயே "பதிவு வெட்டு" .
திருஷ்டி பரிகாரம் போல இந்த பதிவுவெட்டு. பதிவர்களே , கெட் ரெடி , போட்டுத்தாக்க வேண்டிய பதிவுகள் ஏராளம் வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் . ஜமாய்க்கலாம்

அன்புடன்
வேலவன்

Wednesday, May 11, 2011

முன்றாவது முறையும் வெல்லுமா நக்கீரன் கணிப்பு??

பரவலாக அனைத்து ஊடகங்களும் அதிமுகவே வெல்லும் என்று கட்டியம் கூறும் வேளையில், நக்கீரன் மட்டுமே தனது முதல் மற்றும் இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பில் திமுக 140 இடங்களை பிடிக்கும் என்று கூறியது. இன்றைய எக்சிட் போல் முடிவுகளிலும் நக்கீரன் அதையே உறுதி செய்கிறது.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் , அதாவது 2009 , 2006 தேர்தல்களிலும் விகடன் குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் அதிமுக வெல்லும் என்று சொல்லிய வேளையில் நக்கீரன் திமுக வெல்லும் என்று கணிப்பு வெளியிட்டது. குறிப்பாக 2009 பாராளுமன்ற தேர்தலில் நக்கீரன் கணிப்பு மிகச்சரியாக இருந்தது. ஜூ வி கணிப்புகள் தலைகீழாக போனது.

பாப்போம் இந்த முறையும் நக்கீரன் கணிப்பு வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்கிறதா என்று.
நக்கீரன் கணிப்பு
திமுக 137
அதிமுக 89

இழுபறி 8

என் புரிதலின் படியும் திமுகவே இந்த முறை வெல்லும் என்றே தோன்றுகிறது.

இரண்டே நாட்கள் தான் பொறுத்திருந்து பார்ப்போம்

அன்புடன்
வேலவன்

Monday, May 9, 2011

வணக்கம்

பல வருடங்களுக்கு முன்பே பதிவுலகில் கால்(கை) பதித்தவன். சில பல காரனங்களுக்குகாக எழுதுவது இடையிலே தடைபட்டு என் வலைத்தளம் பல ஆண்டுகள் கேட்பாரற்று கிடந்தது.
நானே அவ்வப்போது என் வலைதளத்துக்கு சென்று உச்சுக்கொட்டியதுண்டு , இருந்தும் எழுதுவது தொடரமுடியமலே போனது..

இனியாவது முடியும் என்ற நம்பிக்கையில் இதோ மீண்டும் வந்திருக்கிறேன், உங்கள் தயவோடு.. பார்க்கலாம்.

நன்றியுடன்
வேலவன்